×

முழு கொள்ளளவை எட்டிய 56 ஏரிகள் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில்

வேலூர், டிச.3: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பொதுப்பணித்துறை நீராதாரப்பிரிவு கட்டுப்பாட்டில் உள்ள 519 ஏரிகளில் 56 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாகவும், பருவமழை தீவிரமடையும் நிலையில் விரைவில் அனைத்து ஏரிகளும் நிரம்பும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 519 ஏரிகளும், 200க்கும் மேற்பட்ட குளங்களும் உள்ளன. அதேபோல் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு வடகிழக்கு பருவமழையால் கிடைத்த நீரால் இவற்றில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவை முழு கொள்ளளவை எட்டின.

இந்த நிலையில் நடப்பு ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியுள்ள நிலையில் மழையும் மூன்று மாவட்டங்களில் விட்டு விட்டு பெய்து வருகிறது. அதேநேரத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பாலாற்றில் சிறிய அளவில் நீர்வரத்து தொடர்ந்து கொண்டுள்ளது. தற்போது பாலாறு நீர்பிடிப்பு பகுதிகளான ஆந்திர, கர்நாடக பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணை நிரம்பி வழிந்து வருகிறது. இவ்வாறு வழிந்தோடி வரும் நீரும், மேலரசம்பட்டு ஜவ்வாது மலையில் இருந்து ஓடி வரும் உத்திரகாவேரியாற்றின் நீரும், பொன்னையாற்றில் வரும் நீரும் பாலாற்றின் நீர்வரத்தை சற்று அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பாலாற்றில் கிடைக்கும் நீர் அந்தந்த பகுதிகளில் ஏரிகளுக்கு திருப்பிவிடும் பணியில் பொதுப்பணித்துறை இறங்கியது. இதன் பலனாகவும், தற்போது பெய்து வரும் மழையின் காரணமாகவும் மூன்று மாவட்டங்களிலும் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. மூன்று மாவட்டங்களிலும் பொதுப்பணித்துறை நீராதாரப்பிரிவு கட்டுப்பாட்டில் உள்ள 519 ஏரிகளில் 56 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இதில் வேலூர் மாவட்டத்தில் 101 ஏரிகளில் 10 ஏரிகளும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 369 ஏரிகளில் 40 ஏரிகளும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 49 ஏரிகளில் 6 ஏரிகளும் முழுமையாக நிரம்பியுள்ளன.

மூன்று மாவட்டங்களிலும் மொத்தமுள்ள 519 ஏரிகளில் 76 முதல் 99 சதவீதம் வரை நிரம்பியுள்ள ஏரிகளின் எண்ணிக்கை 17. 36 ஏரிகள் 75 சதவீதம் வரையும், 168 ஏரிகள் 50 சதவீதம் வரையும் நிரம்பியுள்ளன. அணைகளை ெபாறுத்தவரை குடியாத்தம் மோர்தானா அணை 37.72 அடியில் 37.39 அடி நிரம்பியுள்ளது. நீரின் அளவு 258.36 மில்லியன் கனஅடியாகும். அதேபோல் லத்தேரி ராஜாதோப்பு அணை 24.57 அடியில் 9.51 அடி நிரம்பியுள்ளது. திருப்பத்தூர் ஆண்டியப்பனூர் ஓடை அணை 26.24 அடியில் 26.01 அடி நிரம்பியுள்ளது. பருவ மழை தீவிரமடைந்து சில நாட்கள் தொடரும் நிலையில் ஏரிகளும், மூன்று அணைகளும் வேகமாக நிரம்பும் என்று பொதுப்பணித்துறை நீராதாரப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post முழு கொள்ளளவை எட்டிய 56 ஏரிகள் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Ranipet ,Tirupattur ,Public Works Irrigation Department ,Dinakaran ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்...